பிச்சை எடுத்து குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூசன் எடுக்கும் மாற்றுத்திறனாளி..!

இன்றளவும் ஏழைக் குடும்பங்களில் தொடர்ந்து பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தை பிச்சை எடுத்தாவது உன்னை படிக்க வைக்கிறோம் டா.. என்பது தான்.

ஆனால், இங்கு ஒருவர் உண்மையிலேயே பிச்சை எடுத்து தன் குழந்தையை அல்ல, ஊரார் குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கும் சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். பி.ஏ பொருளாதாரம் படித்திருக்கும் இவருக்கு இரண்டு கால்களும் செயல்படாது.

இந்நிலையில், இவர் பல ஊர்களுக்கு சென்று பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் நடத்தி வருகிறார்.

மேலும், இவர் வாழ்க்கையின் கடைசி காலத்துக்காக தற்போது காரைக்குடியிலேயே தனது வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், இவர், தினமும் காரைக்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று வெளியூர் செல்லும் பஸ்களில் பிச்சை எடுத்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக நோட்டுகள், புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதோடு அவர்களுக்கு இலவசமாக டியூசன் நடத்தியும் வருகிறார்.

கடந்த 35 ஆண்டுகளாக இதுபோன்று சமூகத் தொண்டு செய்து வருகிறார் செல்வராஜ். பிச்சை எடுத்தால் தான் அடுத்த வேலைக்குச் சாப்பாடு என்கிற நிலையிருந்தாலும் சமூகப்பணியில் இருந்து இவர் விலகத் தவறவில்லை. தனக்குப் பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை ஏழைப்பிள்ளைகளுக்குப் படிக்க நோட்புக் வாங்கிக் கொடுங்கள் என்று பணம் படைத்த ஒரு சிலரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். இவரின் கோரிக்கைகளை ஒருசில மனிதர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.