தல தோனியின் மொத்த இமேஜும் டேமேஜ்! சக இந்திய வீரரின் பரபரப்பு பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகசிறந்த கேப்டன்கள் என்றால் கபில்தேவ், கங்குலி, தோனி என அனைவருமே சொல்வார்கள். ஒவ்வொருவரும் அவருடைய காலத்தில் ஆளுமையாக ஜொலித்தார்கள்.

தற்போதைய நவீன கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் என்றால் அது தோனி தான். இவ்வாறு தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ரசிகர்கள் கூட்டமும் பேசிக்கொண்டு இருக்கிறது.

இந்திய அணிக்காக 2007-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பை, 2013 ஆம் ஆண்டில் சாம்பியஸ் ட்ரோபி என மூன்றையும் வென்று கொடுத்துள்ளார் தோனி. அவர் தலைமையில்தான் இந்திய அணி மூன்று விதமான கோப்பைகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணியையும் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு சென்ற டோனி கடந்த 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2017-ம் ஆண்டில் ஒருநாள் மற்றும் T20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் வெளியேறினார். தற்போதைய கேப்டன் விராட் கோலி தலைமையில் ஒரு வீரராக தோனி விளையாடி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை விட்டு தோனி விலகினாலும், களத்தில் கேப்டன் விராட் கோலிக்கும், மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் அவ்வப்போது ஆலோசனை, யுக்திகளை வழங்குவார். குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களிடம் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்ற வியூகங்களை ஸ்டம்ப் பின்னல் நின்று கொண்டு பேசிக்கொண்டே இருப்பார். அதைக் கேட்டு செயல்படும் போது விக்கெட்டுகள் விழும் என பெருமையாக பல பந்து வீச்சாளர்கள் பேசியதனை தான் இதுவரை கேட்டிருப்போம்.

ஆனால் முதல்முறையாக டோனியின் சக வீரர் குல்தீப் யாதவ், முதல் முறையாக விமர்சித்துள்ளார். பல்வேறு வியூகங்களை வழங்கும் வீரர் என்று புகழக்கூடிய தோனியை, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஜாலியாக விமர்சனம் செய்துள்ளார்.

மும்பையில் சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம், தோனியின் ஆலோசனைகள் தங்களின் பந்துவீச்சுக்கு உதவியதா என்று கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தோனி எனக்கு அளித்த பல ஆலோசனைகள் தவறாகத்தான் முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் பந்துவீசினாலும் சில நேரங்களில் அது நடக்காமல் போய்விடும் எனவும், ஆனால், இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னது நடக்கவிலையே என்று கேட்கக்கூட முடியாது எனவும் குல்தீப் கூறியுள்ளார்.

மேலும் தோனி வீரர்கள் யாருடனும் அதிகமாகப் பேசமாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார். அதிலும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து ஏதாவது சொல்வார். அந்த நேரத்தில் கூட முக்கியமான விஷயத்தை, வியூகத்தை பந்து வீச்சாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றால் மட்டுமே வந்து பேசுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவும், தோனியும் இணைந்து விளையாட உள்ள நிலையில் குல்தீப் இவ்வாறு தோனி பற்றி கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது வந்துள்ள எதிர்மறையான கருத்து, அணியின் மீது ரசிகர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. தோனி மட்டும் அல்ல யாராக இருந்தாலும் வகுக்கும் வியூகம் தோல்வியடையலாம் என்பது இயற்கை தானே!