பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது இல்லத்தில் புதியதாக ஒரு குட்டி விருந்தாலி வரவுள்ளதால் அந்த குடும்கத்தை சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

வீட்டு வேலை, குழந்தைகள், சமையல் என்றிருந்த பெண்களை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தது மெகா தொடர்கள்.

ஒரு சீரியலின் கதை குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை வந்ததால், அதனைத் தொடர்ந்துப் பார்த்த பெண்களுடன் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இணைந்து அதனைப் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் சின்னத்திரையில் இருந்து, மக்களை பிரிக்க முடியாத சூழல் உருவானது.

அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. கூட்டுக் குடும்பமாக வாழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

அண்ணன் தம்பிகள் 4 பேர், அதில் மூவருக்கு திருமணமாகிவிட்டது. மூத்தவரான மூர்த்தி, தனத்தை திருமணம் செய்துக் கொண்டதும், என் தம்பிகள் தான் எனது உலகம், அதனால் குழந்தை எல்லாம் வேண்டாம் என்கிறார். மூர்த்தியின் மனதைப் புரிந்துக் கொண்ட தனமும், அதற்கு சம்மதிக்கிறார்.

ஆனால் சராசரி பெண்களைப் போல குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தனத்தின் அடி மனதில் இருந்தாலும், அதனை வெளியில் சொல்லாமல் விட்டுவிடுகிறார்.

இதற்கிடையே மூர்த்தியுன் மூத்த தம்பியான ஜீவாவின் மனைவி, மீனா கர்ப்பமாகிறாள். இதனை மருத்துவரிடம் உறுதிப்படுத்த அவர்கள் செல்ல, வீட்டிலிருக்கும் தனத்திற்கோ நிலை கொள்ளவில்லை. அங்கும் இங்கும் நடந்து, ஒரே பதட்டத்துடன் இருக்கிறார்.

என்ன ஏதென்று மூர்த்தி விசாரிக்க, முதலில் சொல்ல மறுக்கும் தனம், பிறகு மீனா கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் கூறுகிறார்.

தங்கள் குடும்பத்திற்கு முதல் வாரிசு வரப்போவதை நினைத்து மூர்த்தியும், தனமும் மாறி மாறி நெகிழ்ந்து போகிறார்கள். ‘குழந்தை வேணாம்ன்னு நாம முடிவு பண்ணுனாலும், எப்போவாச்சும் இந்த பிரெக்னென்ஸி கார்டுல 2 கோடு காட்டாதான்னு, எத்தனை முறை போட்டு பாத்திருப்பேன் தெரியுமா.

ஆனா அது எனக்கு 1 கோடு தான் காட்டும்’ என அழும் தனத்தைப் பார்த்து அதிர்ந்து போகிறார் மூர்த்தி. உனக்குள்ள இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு சொல்லாம விட்டுட்டியே, என்று தனத்திடம் கேட்கிறார்.

மீனாவை பரிசோதித்த மருத்துவர் அவள் 50 நாட்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த, அந்த தகவலை உடனே அண்ணிக்கு தெரியப்படுத்துகிறான் ஜீவா. வீட்டிற்கு வந்ததும் ஜீவாவும், மீனாவும், மூர்த்தி – தனம் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார்கள்.

தன் அண்ணனும், அண்ணியும் மகிழ்வதைப் பார்த்து, உணர்ச்சிவசப்படுகிறான் ஜீவா. ’இது என் குழந்தை இல்ல, உங்க குழந்தை, நீங்க தான் அத வளக்கணும்’ என ஜீவா சொல்ல மூர்த்தியும் தனமும் நெகிழ்கிறார்கள்.

தான் சொல்லும் வரைக்கும் வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறாள் தனம். மீனா, இந்த விஷயத்தை தன் குடும்பத்திடம் சொல்ல விரும்ப, ஜீவாவோ இப்போது வேண்டாம் அண்ணன் அண்ணியிடம் கேட்டு பிறகு சொல்லலாம் என்கிறான்.

சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் மூர்த்தி கடைக்கு வந்து அனைவருக்கும் சாக்லெட் கொடுக்கிறார். அனைவரும் என்ன காரணம் எனக்கேட்டு துளைத்தெடுக்கிறார்கள். ஆனால் மூர்த்தி அவர்களிடம் உண்மையை சொல்லாமல் சமாளிக்கிறார்.

மூர்த்தியின் இளைய தம்பியான கதிருக்கோ, முல்லையின் ஞாபகம் வந்துவிட, அவளைப் பார்ப்பதற்காக அவள் வீட்டு வாசல் வரை செல்கிறான். பிறகு ஏதோ ஒன்று அவனை போகவிடாமல் தடுக்கிறது. அப்போது கதிரை பார்த்த முல்லையின் அப்பா, வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். இந்த உடையில் போனால் முல்லை சண்டை போடுவாள், என்று நினைத்த கதிர், இன்னொரு நாள் வருகிறேன் என்று கூறி கிளம்புகிறான்.

ஆகையால், கதிருக்கும் முல்லைக்கும் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நினைத்த முல்லையின் அப்பா, அவளது அம்மாவிடம் இதைப் பற்றி கூறுகிறார். முல்லை – கதிர் தங்களது தவறான புரிதலை எப்போது புரிந்துக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.