விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, சஞ்சீவ், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், ஶ்ரீமன், ஶ்ரீநாத்… எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணையும் ‘விஜய் 64’ படம்தான், கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்! ‘பிகில்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி, நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘விஜய் 64’ படத்தின் பத்து சுவாரஸ்யங்கள் இங்கே!

* ‘பிகில்’ படத்துக்கு 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்த விஜய், ‘விஜய் 64’ படத்துக்காக 65 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார்.

* தீபாவளிக்கு வெளியாகும் ‘பிகில்’ படத்துக்குப் போட்டியாக கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தைக் களமிறக்கும் லோகேஷ் கனகராஜ்தான், ‘விஜய் 64’ படத்தின் இயக்குநர் என்பதால், இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ‘பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்குப் பயிற்சியாளராக நடித்துள்ள விஜய், இப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார்.

* இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்க, நக்கலைட்ஸ், பிளாக்‌ஷீப் உள்ளிட்ட பல பிரபலமான யூடியூப் சேனல்களில் இருக்கும் கலைஞர்களைப் பயன்படுத்தவிருக்கிறது, ‘விஜய் 64’ டீம்.

* எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ரஜினி, சேது மாதவன் இயக்கிய ‘நம்மவர்’ படத்தில் கமல்ஹாசன், முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படத்தில் விஜயகாந்த்… எனப் பல டாப் ஹீரோக்கள் கல்லூரிப் பேராசிரியராக நடித்துக் கலக்கியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது விஜய் இணைகிறார்.

* ‘விஜய் 64’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘இந்தப் படத்துல விஜய் சாருக்கு இணையான கேரக்டர் உங்களுக்கு… இந்தப் படம் ரிலீஸான பிறகு, உங்க நடிப்பு நிச்சயம் பெருசா பேசப்படும்’ என்று விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை எடுத்துச் சொல்லி, அதில் இருக்கும் முக்கியத்துவத்துக்கும் உறுதியளித்திருக்கிறார்.

* ‘விஜய் 64’ படத்துக்குப் பூஜை போடப்பட்டு, சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு, ஈ.வி.பி ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கினார்கள். தற்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள இந்திரா மில்லில் விஜய் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

* இப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் சில்வா பிரமாண்டமாக அமைத்திருக்கிறார். ‘ஜில்லா’ படத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு விஜய் – ஸ்டன்ட் சில்வா இணைந்திருக்கிறார்கள்.

* சென்னை குன்றத்தூரில் இருக்கும் மாதா கல்லூரியில் விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கும் காட்சிகளைப் படமாக்கப்போகிறார்கள். இதற்காக, மாதா இன்ஜினீயரிங் கல்லூரிக்குப் பெயின்ட் அடித்துப் பளபள தோற்றத்துக்கு மாற்றும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

* இப்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கிக்கொண்டிருக்கும் ‘லாபம்’ படப்பிடிப்பில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அது முடிந்தவுடன், விரைவில் விஜய்யுடனான ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள்.

* ‘கத்தி’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் படத்தில் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

* 2020 ஏப்ரல் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறது, ‘விஜய் 64’ படக்குழு

Loading...