சுவிஸ் விலங்குகள் காட்சி சாலை ஒன்றில் ஒரே கூண்டில் குடும்பமாக வாழ்ந்த உராங்குட்டான்களில், குட்டிக்குரங்கு ஒன்றிற்கு DNA சோதனை செய்தபோது, அந்தக் குரங்கு தன் தாயுடன் ஒரே கூண்டில் வாழ்ந்த ஆண் குரங்கிற்கு பிறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பேஸலில் அமைந்துள்ள, விலங்குகள் காட்சி சாலை ஒன்றில் வாழும் பத்மா என்ற குரங்குக் குட்டிக்கு அப்பா யார் என்பதை அறிவதற்காக DNA சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவுகள், பத்மாவின் அம்மாவான மஜாவுடன் வசிக்கும், புடி என்னும் 14 வயதுள்ள ஆண் குரங்கு அதன் அப்பா இல்லை என்று தெரிவித்தன.

உராங்குட்டான்கள் அழிந்து வரும் இனம் என்பதால், விலங்குகள் காட்சி சாலை ஊழியர்கள் இனப்பெருக்கத் திட்டம் ஒன்றின் ஒரு பகுதியாக, புதிதாக பிறக்கும் குரங்குக் குட்டிகளுக்கு DNA சோதனை நடத்துவது வழக்கம்.

அப்படி சோதனை செய்யும்போதுதான் பத்மா குறித்த விடயம் வெளியாயிற்று. பின்னர் பத்மாவின் அருகிலிருக்கும் குரங்குகளுக்கும் DNA சோதனை செய்யப்பட்டது.

அப்போதுதான் மஜா தனது கூண்டின் அருகில் இருக்கும் கூண்டில் வசிக்கும் வெண்டெல் என்னும் 18 வயது குரங்குடன் இணைந்ததும், வெண்டெல்தான் பத்மாவின் அப்பா என்பதும் தெரிய வந்தது.

வெண்டெல் அந்த வன விலங்குக் காட்சியகத்திலேயே ஆதிக்கம் செலுத்தும் இயல்புடைய ஒரு ஆண் குரங்கு.

மட்டுமின்றி அகன்ற கன்னங்கள் கொண்டதும் கூட.உராங்குட்டான்களில், பெண் குரங்குகள் எப்போதுமே அகன்ற கன்னங்களையுடை ஆண் குரங்குகளால் எளிதில் ஈர்க்கப்படும்.

வெண்டெல் ஆதிக்கம் செலுத்தும் குரங்காக இல்லாதிருந்தால்கூட அதன் கன்னத்தின் அழகுக்காகவே மஜா அதனிடம் மயங்கியிருக்கலாம்.

அதனால் அவர்கள் காதலுக்கு குறுக்கே புடி என்ன, இரும்புக்கூண்டு கூடவரமுடியவில்லை.

விளைவு பக்கத்து கூண்டு வெண்டெல் பத்மாவின் தந்தையாகிவிட்டது.

மனிதர்களாகிய நமக்கு இது ஒருவேளை வேடிக்கையாக தோன்றினாலும், விலங்குகளைப் பொறுத்தவரை ஆதிக்கம் செலுத்தும் மற்றும் ஆண்மை பொருந்திய அல்லது அழகான ஆண் விலங்குகளுக்கே தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

அது இயற்கையும் கூட, ஏனென்றால் ஒரு வலிமையான, ஆரோக்கியமான ஆண் விலங்குக்கு பிறக்கும் குட்டிதான் ஒரு வலிமையான வாரிசாக அமையும், அது தன்னை அடுத்து வலிமையான சந்ததிகளை உருவாக்கும், அது இயற்கையின் தேர்வு என்றால் மிகையாகாது.

Loading...