டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த நாட்டுபுறப் பாடகி கடந்த வாரம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தபெண்ணின் காதலன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்து வந்த நாட்டுபுறப் பாடகி சுஷ்மா(25). இவரை கடந்த 1ஆம் தேதி இரவு 8 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சுஷ்மாவின் காதலர் கஜேந்திர மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேர்ந்து வாழ்ந்த தம்பதி

காவல்துறை ஆய்வாளர் இந்த வழக்கு குறித்து கூறுகையில், சுஷ்மா தனது தாய், சகோதரி மற்றும் அவரது காதலன் கஜேந்திர பாட்டி ஆகியோருடன் வசித்து வந்தார்.

சுஷ்மாவும் அவரது காதலன் கஜேந்திர பாட்டியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சுஷ்மாவிற்கும், காதலனுக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சுஷ்மா நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாட்டுபுறப் பாடல்கள் பாடுவது, அவருடைய காதலனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கஜேந்திர காதலியை சுஷ்மாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

அதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் சுஷ்மா சென்ற காரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முடிவு செய்துள்ளனர், ஆனால் அதில் சுஷ்மா அதிர்ஷ்டவசமாக தப்பிவிடவே, சம்பவ தினத்தன்று சுஷ்மாவை சுட்டு கொலை செய்துள்ளனர்.

சுஷ்மாவை சுட்டுக் கொலை செய்ய பிரமோத்,அஜப் சிங் மற்றும் டிரைவர் அமித் ஆகியோருடன் சேர்ந்து கஜேந்திரா திட்டமிட்டுள்ளார்.

இதன்படி கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொலை செய்ய இருவருக்கும் 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இவர்கள் திட்டமிட்டபடி 1-ஆம் தேதி இரவு சுஷ்மா தனது வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கிய உடனே அவரை இந்த நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

Loading...