பொன்னேரி அருகே குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட மோதலில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரியை அடுத்த அரவாக்கத்தைச் சேர்ந்தவர் திரேச்குமார். இவரது மனைவி கோமதி (வயது27). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான்.

திரேச்குமார் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உள்ள மெடிக்கல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அவர் அப்பகுதியிலேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் காலை திரேச்குமார் சமையலுக்கு கோழிக்கறி வாங்கி வந்தார். அப்போது சமையல் செய்வதற்காக மகனை கவனிக்குமாறு அவரிடம் மனைவி கோமதி கூறினார்.

இதற்கு திரேச்குமார் மறுத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திரேச்குமார், மனைவி கோமதியை தாக்கினார். மேலும் அருகில் கிடந்த வயரால் கோமதியின் கழுத்தை நெரித்து கொன்றார்.

பின்னர் பயந்து போன திரேச்குமார், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து விட்டதாக அரவாக்கத்தில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் வந்து கோமதியின் உடலை ஆம்புலன்சு மூலம் அரவாக்கத்துக்கு எடுத்து சென்று விட்டனர். அப்போது கோமதி கொலை செய்யப்பட்டு இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுடன் ஒன்றும் தெரியாதது போல் திரேச்குமாரும் வந்தார்.

இதற்கிடையே கோமதியின் உறவினர்கள் நாயுடு பேட்டை போலீசில் இது பற்றி புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அரவாக்கத்திற்கு விரைந்து வந்து கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கோமதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து திரேச்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். முதலில் கொலையை மறைத்து வந்த அவர் பின்னர் மனைவியை கோபத்தில் கொன்று விட்டதை ஒப்புக்கொண்டார்.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading...