சென்னை மாதவரத்தில் அரசு மருத்துவர் எனக் கூறி ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர், வரவேற்பு நிகழ்ச்சியில் தனது மாமாவால் வசமாக சிக்கினார்.

வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த கார்த்திக் என்ற நபர், தன்னை அரசு மருத்துவர் என்று கூறிக்கொண்டு அரசுப்பணியைக் குறிக்கும் ‘G’ என்ற எழுத்தை அச்சிட்ட காரில் சென்று வந்துள்ளார்.

அவரை மருத்துவர் என்று நினைத்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் வீட்டுப் பெண்ணை அவருக்கு திருமணம் பேசி முடித்தனர். தனக்கு பெற்றோர் இல்லை என்றும், உறவினர்கள் மட்டுமே இருப்பதாகவும் பெண் வீட்டாரிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திக்கிற்கும், குறித்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் வியாழக்கிழமை அன்று தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்துகொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கின் மாமா மதுபோதையில் அங்கு வந்துள்ளார்.

அத்துடன் வரதட்சணை தொடர்பாக பெண் வீட்டாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, கார்த்திக் ஒரு பிச்சைக்காரன் என்று ஒரு கட்டத்தில் போதையில் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ந்த பெண் வீட்டார் கார்த்திக்கிடம் விசாரித்தபோது அவர் உளறியுள்ளார்.

அதனால் அங்கிருந்து ஒட்டுமொத்த கூட்டமும் கார்த்திக்கை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மாதவரம் போலிசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டபோது, கார்த்திக்கின் சொந்த ஊர் கோவை என்பதும், அவர் போலி மருத்துவர் என்பதும் தெரிய வந்தது.

அத்துடன் அவரது உறவினர்கள் என்று வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போலி என்பதும், 8 மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கத்தில் குடியேறிய கார்த்திக், வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய திட்டம் தீட்டியதும் அம்பலமானது.

இந்நிலையில், கார்த்திக் இதேபோல் வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா அல்லது வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...