டிகர் லாரன்ஸ் நடத்தி வரும் டிரஸ்டின் துணை தலைவர் என கூறி, ராமநாதபுரத்தில் பெண்ணிடம் மருத்துவ சீட் பெற்று தருவதாக சுமார் 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் சின்னக்கடை தெருவை சேர்ந்த அல் அமீனின் மனைவி பத்தூன் நிஷா. இவரது மகள் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று, குறைவான மதிப்பெண்ணுடன் நீட் தேர்வில் பாஸ் செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், பத்தூன் நிஷா, சின்னக்கடை பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மகளுக்கென டிராவல்ஸ் டிக்கெட் வாங்க சென்றுள்ளார். அந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணிடம் பத்தூன் நிஷா தனது மகளை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, வேலூரை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார்.

பத்தூன் நிஷாவிடம் அவரது மகள் குறித்து பேச்சுக்கொடுத்த அவர், தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் டிரஸ்டின் துணை தலைவர் என்று அறிமுகம் செய்துள்ளார். மேலும் தங்களது டிரஸ்ட் மூலம், வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் பத்தூன் நிஷாவின் மகளுக்கு குறைந்த செலவில் சீட் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பத்தூன் நிஷா, முதல் தவணையாக பிரவீன் குமார் கேட்டதற்கு இணங்க குறிப்பிட்ட வங்கி கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். அதன்பின் மீண்டும் வாட்ஸ்அப், செல்போனில் தொடர்பு கொண்ட பிரவீன் குமார், விடுதி கட்டணம், புத்தக செலவு, டொனேஷன் என ஒவ்வொன்றாக கூறி பத்தூன் நிஷாவிடம் இருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.

அதன்பின் இறுதியாக செப்டம்பர் 7ம் தேதி மருத்துவ சீட்டுக்கான கவுன்சிலிங் நாள் என கூறிய அவர், பத்தூன் நிஷா குடும்பத்தினர் தங்குவதற்கென போலியாக அறை முன்பதிவு செய்தது போல் அறை எண்ணையும் வழங்கியுள்ளார். இதனை நம்பி இருந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி, ஏதோ சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள பிரவீன் குமாரை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவர் பல முறை அழைத்தும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகத்துடன் பத்தூன் நிஷா, ராகவா லாரன்ஸ் நடத்தும் டிரஸ்டை தொடர்பு கொண்டபோது, அதுபோல் ஒரு நபர் அங்கு பணியாற்றவில்லை என தெரிந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பத்தூன் நிஷா மற்றும் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார், தலைமறைவான பிரவீன் குமாரை தேடி வருகின்றனர்.

தகுதியும் திறமையும் இருக்கும் பட்சத்தில் சரியான தேடல், முறையான திட்டமிடல் இருந்தால் மருத்துவம் மட்டுமல்லாது எந்த துறையிலும் வெற்றியடையலாம். ஆனால் எப்படியும் சேர்ந்துவிடவேண்டும் என்பதற்காக முன்பின் தெரியாத நபர்களிடம் உதவி கேட்டு பணத்தை கொடுப்பதால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

 

Loading...