பெண்ணின் கருப்பையில் இருந்த பைக்கின் கைப்பிடி.. விசாரணையில் வெளிவந்த கணவரின் கொடூர செயல்..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் கருப்பையில் இருசக்கர வாகனத்தின் கைப்பிடி இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், தார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவர் மது அருந்திவிட்டு தினமும் அவரை சித்ரவதை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலி இருந்துள்ளது.

அந்தப் பெண், மருத்துவமனையில் சோதனை செய்தபோது அவரின் கருப்பையில் பைக் கைப்பிடியின் உடைந்த 6 இஞ்ச் பகுதி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அப்போது அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் வரை செலவாகும் என்பதால் வீடு திரும்பிய அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில், அவருக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதையும், அந்த பெண்ணை அவருடைய கணவர் பல நேரங்களில் அடித்து சித்ரவதை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருநாள் கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கிய கணவர், ஆத்திரத்தின் உச்சத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் கைப்பிடியை சொருகியுள்ளார்.

பெண்ணை புகாரை கேட்டு அதிர்ந்த காவல்துறையினர் அவரது கணவரை கைது செய்ததுடன், பெண்ணை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

சுமார் 4 மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் அவரது கருப்பையிலிருந்து 6 இஞ்ச் அளவிலான பைக்கின் கைப்பிடி பிளாஸ்டிக் துண்டை அகற்றினர். இதையடுத்து அப்பெண் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த கோரச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.